மூடு

பொதுவான தகவல்கள்

புதுவை யூனியன் பிரதேசம் முந்தய பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவை, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. புதுவைக்கு அடுத்தபடியாக காரைக்கால் மாவட்டம் நில பரப்பிலும் மக்கள் தொகையிலும் பெரிய பகுதியாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களினால் சூழப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் தெற்கு மார்க்கமாக சென்னையிலிருந்து 300 கி.மீ மற்றும் தலைநகரமான புதுச்சேரியிலிருந்து 135 கி.மீ தொலைவில் காரைக்கால் அமைந்துள்ளது

பண்டைய காலந்தொட்டே, மதப் பாரம்பரிய மிக்க ஊராக காரைக்கால் அறியப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மாரும்,  அம்மையே என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையார்  அவதரித்த புண்ணிய பூமிதான் காரைக்கால். காரை பகுதியில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்து ஆகிய மும்மதத்தினரும் வசித்து வருகிறார்கள்.

கடற்கரையிலிருந்து வரும் சுத்தமான காற்றை சுவாசித்து ஓய்வெடுக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு அருமையான இடம். அரசலாற்றை ஒட்டியுள்ள சாலையும், அது கடலில் கலக்கும் அழகும், அதைச்சார்ந்து பரவி கிடக்கின்ற கடற் மணற் பரப்பும் காரை வாழ் மக்களுக்கான பொழுது போக்கு இடமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் பொது மக்களின் வசதியை கருத்திற்கொண்டு, நடைபாதைகள், இருக்கைகள், அலங்கார விளக்குகள் மற்றும் லே கபே போன்றவற்றை புதுவை அரசு அமைத்து பராமரித்து வருகிறது. இப்பகுதி உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் மனதையும் கொள்ளை கொள்ளத் தவறியதே இல்லை எனலாம்.

பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தால் அமைதி பூமியான காரைக்காலில் இன்றளவும் அதன் வாசனை வீசிக்கொண்டுதானிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா யாத்ரீகர்கள் இந்த கோயில் நகரத்தை தங்கள் பயணத்தில் சேர்க்கத்தவறுவதில்லை.

  • நிலப்பரப்பு                 :  161 சதுர கி.மீ.
  • மக்கள்தொகை       : 2 00 222 (2011 கணக்கெடுப்பு அடிப்படையில்)
  • தட்பவெப்ப நிலை : வெப்ப மண்டலப்பகுதி

காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்கள் அனைத்தும் தங்களுடைய நீர் தேவைகளுக்காக காவிரியையும் அதன் கிளை நதிகளையும் நம்பி உள்ளது. காரை பகுதியில் சராசரியாக 126 cm மழை  பதிவாகிறது. அதன் பெரும்பகுதி அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெறப்படுகிறது.