மூடு

விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

காரைக்கால் மாவட்டப்பகுதி, காவிரி நதிபாயும் கடைமடை பகுதியில் அமைந்துள்ளது. காவிரியும் அதன் துணை நதிகளும் இப்பகுதியை வளப்படுத்துகின்றன. எனவே இப்பகுதி புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

காவிரியில் போதுமான அளவு நீர் வராத காரணத்தாலும் போதிய மழை பெய்யாததாலும் சாகுபடி செய்யும் பரப்பளவு பெருமளவு குறைந்தது மட்டும் அல்லாமல் மூன்று பருவ காலம் பயிர் செய்த இடத்தில் ஒரு பருவ காலம் மட்டுமே பெரும்பாலான இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். நெல்லைத் தவிர மணிலா, பருப்பு வகைகள், எள், வாழை மற்றும் காய்கறிகளும் இங்கே பயிரிடப்படுகிறது.

விவசாயிகள் பயனடையும் வண்ணம், விவசாயத்தை கவனிக்க தனியாக விவசாயத்துறை 1955-ல் ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகள் நவீன உத்திகள் பயன்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான உதவிகளையும் விவசாயத்துறை வழங்குகிறது. ஜவஹர்லால் நேரு விவசாயக்கல்லூரி 1987-ல் தொடங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவுரைகள் அவ்வப்போது தரப்படுகிறது. நெல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று மாதூரில் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் அதிக உற்பத்தித்தரும் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.