காணத்தக்க இடங்கள்
கிழக்குக்கடற்கரையோரம் அமையப்பட்ட எழில் கொஞ்சும் நகரமான காரைக்கால் ஒரு வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. புதுவை அரசின் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 99 இந்து கோவில்கள் இருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்ச் சைவ நாயன்மார்களாலும், வைணவ ஆழ்வார்களாலும் வழிபட்டு பாடப்பெற்ற பலத்திருத்தலங்கள் காரைக்காலிலும் அதனைச்சுற்றியுள்ள தமிழக ஊர்களிலும் பரவிக்கிடப்பது இங்கு பக்தர்கள் வருகை புரிவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்து சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் நான்கு கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. அவையாவன
- தருமபுரம் – யாழ்முரிநாதர் திருக்கோவில் – 1.8 கி.மீ
- திருநள்ளாறு – தர்பாரண்யேஸ்வர சாமி தேவஸ்தானம் – 5 கி.மீ.
- கோவில்பத்து ( திருத்தெளிச்சேரி) – பார்வதீஸ்வரர் ஆலயம்-பேருந்து நிலையம் அருகில்
- திருவேட்டக்குடி – திருமேனியழகர் சாமி திருக்கோவில் – 9.9 கி.மீ.
காரைக்கால் அம்மையார் கோவில்
காரைக்கால் அம்மையார் கோவில் 64 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மாரும் இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதி அம்மையார் பிறந்து பெருமை பெற்றது காரைக்கால். காரைக்காலில் எழந்தருளியிருக்கும் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீநித்திய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தான சுந்தரேஸ்வரர் கோவிலில் அம்மையாருக்கு ஒரு தனிச்சன்னதி உண்டு. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் முழு நிலவு அன்று காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையைச் சித்தரித்து மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுவது காரைக்காலின் சிறப்பு.
ஊருக்கு மத்தியில் அம்மையார் கோவில், ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மற்றும் ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் கோவில் சூழ அமைந்திருக்கும் அம்மையார் திருக்குளம் காண்பவர் மனதை கவர்வதுடன் அனைத்து தர மக்களாலும் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலை, அனைவரது உடலுக்கும் மனதுக்கும் ஊக்கம் தரக்கூடியதாய் விளங்குகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தெர்பாரண்யேஸ்வர சாமி
திருநள்ளாறு ஸ்ரீ தெர்பாரண்யேஸ்வர சாமி திருக்கோவில் தனிச்சிறப்புற்று விளங்குவதற்கு பாடல் பெற்ற தலமோடு மட்டுமின்றிஇங்கு மரகதலிங்கம் அமையப்பெற்று சப்தவிட தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
மேலும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் இத்திருக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி இத்திருத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மஸ்தான் சையது தாவூது தர்கா :
முஸ்லீம் மக்களின் தீர்க்கதரிசியாக விளங்கிய வலியுல்லாஹ் மஸ்தான் சையது தாவூது அவர்கள் டர்கிஸ்தான் தலைநகரான புக்காரா வில் பிறந்து திருச்சிராப்பள்ளியிலிருந்த தனது ஆன்மீக குருவை தேடி இந்தியாவிற்கு வருகை புரிந்தார். தனது இறுதி காலத்தை காரைக்காலில் கழித்த அவர் தனது 120 வது வயதில் 24 /02 /1829 அன்று இயற்கை எய்தினார். அன்னாரை கௌரவிக்கும் வகையில் காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் (கபர்) தர்கா அமைத்து அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வலி உல்லாஹ் மஸ்தான் சையது தாவூது அவர்களை நினைவு கூறும் வகையில் அவரை அடக்கம் செய்த இடத்தில் (கபர்) ஒவ்வொரு வருடமும் சந்தனக்கூடு வைபவம் முஸ்லீம் மதத்தினரால் சிறப்பாக நடைபெறுகிறது. வெகு விமரிசையாக நடைபெறும் இச்சந்தனக்கூடு வைபவம் முஸ்லீம் மதத்தினரின் கலைநயத்துடன் வடிவமைத்து அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் ஆடல் பாடல்களுடன் பட்டாசு வெடித்தும் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தும், கொண்டாடப்படுவது காண்பவர் மனதைக் கவர்ந்து நீங்கா இடம்பிடிக்கும்.

தூய தேற்றரவு அன்னை தேவாலயம்
1740 ல் கட்டப்பட்டு 1828 புதுப்பிக்கப்பட்ட இத்தேவாலயம் காரைக்காலில் கத்தோலிக்க கிறித்தவ மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக சிறப்புற்று விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் அலங்கார விளக்குகளுடன் அமைதியாக தூய தேற்றரவு அன்னை காரை மாநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள் வழங்குகிறார். அன்னை வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க கால்நடையாகவே செல்லும் வெளியூர் பக்தர்கள் இத்தேவாலயத்தை தரிசித்து செல்வதை தம் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
காரைக்கால் கடற்கரை என்றாலே தூய்மையான காற்றும், கடலலையின் அழகும் என்று சொல்லத்தேவையில்லை. ஆனால் காரைக்கால் கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்றால் அரசலாற்றை ஒட்டியுள்ள கடற்கரைச்சாலையிலிருந்தே காற்றை அனுபவித்தாக வேண்டும்.
காரை வாழ் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய அளவிளான மணற் பரப்பை கொண்ட இந்தக்கடற்கரை ஒன்றே மிகப்பெரிய பொழுது போக்கு. புதுவை அரசானது பொது மக்கள் பயனுறும் வகையில் மின் விளக்குகள், வாகனங்கள் நிறுத்த வசதி, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாட பூங்காக்கள், பெரியவர்கள் அமர்ந்து காற்று வாங்க பல்வேறு வகை இருக்கைகள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய கம்பங்கள், நடைபயிற்சி செய்ய தடங்கள், கடற்கரை உணவகம், தங்கும் வசதி, உணவகத்துடன் கூடிய படகு சவாரி என்று பார்த்து பார்த்து செய்து கொடுத்து இருக்கிறார்கள்.
